வாரவிடுமுறை, முகூர்த்த நாளையொட்டி பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

வாரவிடுமுறை, முகூர்த்த நாள் என்பதால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். சுமார் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-12-01 22:00 GMT
பழனி, 

சபரிமலை சீசன் தொடங்கி உள்ளதாலும், திருக்கார்த்திகை திருவிழா தொடங்க உள்ளதாலும் பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்தநாள் என்பதால் அதிகாலை முதலே பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கிரிவீதிகள், சன்னதிவீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்ததால், ரோப்கார் நிலையம், மின்இழுவை ரெயில்நிலையத்தில் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து மலைக்கோவிலுக்கு சென்றனர். மேலும் பொதுதரிசனம், கட்டளை, கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகள், மலைக்கோவில் வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

திருக்கார்த்திகை திருவிழா தொடங்க உள்ளதால் பழனி கிரிவீதிகளில் உள்ள சுற்றுலா பஸ்நிலையத்துக்கு மட்டும் கார், வேன், பஸ்கள் செல்ல அனுமதிக்கப்பட்டன. பழனியில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்ததால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர். அதேவேளையில் குடும்பத்துடன் வந்தவர்களில் சிலர் மழையால் கடும் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்