திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை போலீசார் விசாரணை

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2019-12-01 23:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த முரளி மகள் மைதிலி (வயது 19) என்பவர் ஒருங்கிணைந்த பி.எஸ்.சி. பி.எட். பட்டப்படிப்பில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பல்கலைக்கழக விடுதியில் அவர் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு விடுதியில் உணவு சாப்பிட மைதிலி வரவில்லை என தெரிகிறது.

இதையடுத்து சக மாணவிகள் சாப்பிட அழைப்பதற்காக மைதிலியின் அறைக்கு சென்றனர். அப்போது மைதிலி விடுதி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் கதறி அழுதபடி பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நன்னிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் நன்னிலம் போலீசார் மத்திய பல்கலைக்கழகத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் மைதிலி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக மைதிலியின் நண்பர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மைதிலி தற்கொலை செய்து கொண்டது குறித்து ஓசூரில் வசிக்கும் அவருடைய பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் உடனடியாக திருவாரூர் வந்தனர். அவர்களிடம் மைதிலியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு ஒப்படைக்கப்பட்டது. திருவாரூர் மத்திய பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் தற்கொலைக்கு காரணம் என்ன? என்பது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்