வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல் - கம்மாபுரம் அருகே பரபரப்பு

கம்மாபுரம் அருகே வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-01 22:15 GMT
கம்மாபுரம், 

கம்மாபுரம் அருகே கோபாலபுரம் அன்னை இந்திரா காலனியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்படுகிறது. இதன் காரணமாக மழைக்காலங்களில் இந்த வடிகால் வாய்க்காலில் தண்ணீர் வடிந்து செல்ல வழியின்றி, குடியிருப்பு பகுதி களுக்குள் புகுந்து வரு கிறது.மேலும் மழைநீர் குடிநீரில் கலந்து வருவதால் கிராம மக்கள் பெரிதும் அவதியடைந்து வந்தனர். இதனால் வடிகால் வாய்க்காலை தூர்வாரக்கோரி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலை பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலைக்கு திரண்டு வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கம்மாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தோ‌‌ஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் வடிகால் வாய்க்காலை உடனே தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதற்கு போலீசார் இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் பரங்கிப்பேட்டை- விருத்தாசலம் சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்