மத்திய அரசு புதுவைக்கு வழங்க வேண்டிய, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூ.400 கோடியை தர வேண்டும்

மத்திய அரசு புதுவைக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகை ரூ.400 கோடியை உடனடியாக தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-12-01 22:30 GMT
புதுச்சேரி,

மராட்டியத்தில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. உத்தவ் தாக்கரே நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று இருக்கிறார். இதற்கு முன்பு பெரும்பான்மையில்லாமல் கவர்னரை கைப்பாவையாக வைத்துக் கொண்டு பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாததால் பதவியேற்று 2 நாட்களில் ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியை கவர்னர் அழைத்து முதல்-அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்தது மிக பெரிய ஜனநாயக படுகொலை. ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ள சுப்ரீம்கோர்ட்டிற்கு நன்றி சொல்ல வேண்டும்.

பல மாநிலங்களில் பா.ஜ.க. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் குதிரைபேரம் பேசி சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை மாற்றியமைத்தது. ஆனால் அது மராட்டியத்தில் பலிக்கவில்லை. இது பா.ஜ.க.விற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தல் மூலம் மராட்டிய மக்கள் பா.ஜ.க.விற்கு பாடம் புகட்டியுள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கவுன்சிலில் இருந்து புதுவை மாநிலத்திற்கு கிடைக்க வேண்டிய பங்கு மத்திய நிதி அமைச்சகத்திடம் இருந்து கடந்த 4 மாதங்களாக வரவில்லை. 2 மாதங்களுக்கு ஒருமுறை அந்த இழப்பீட்டு தொகையை மத்திய அரசு நமக்கு தர வேண்டும். ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் வரை நமக்கு வழங்க வேண்டிய ரூ.400 கோடியை வழங்காமல் மத்திய அரசு காலம் கடத்தி வருகிறது.

புதுச்சேரியில் வணிகவரி, கலால்வரி, போக்குவரத்து துறை வரியை தவிர வேறு வரிகள் வசூல் செய்யும் சூழல் இல்லை. மூன்று துறைகளின் வரியைத்தான் மக்கள் நல திட்டங்களுக்கும், அரசு ஊழியர்கள் சம்பளம் போடவும் பயன்படுத்துகிறோம். எனவே உடனடியாக மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி நிதியை வழங்க வேண்டும்.

எனவே நம்முடைய வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிதி தேவைப்படுகிறது. மத்திய அரசு புதுச்சேரி வியாபாரிகளிடம் வசூல் செய்த சரக்கு மற்றும் சேவை வரியை உடனடியாக திருப்பித்தர வேண்டும்.

தற்போது பல மாநிலங்களில் தனியாக செல்லும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது, பின்னர் எரித்து கொலை செய்வது என தொடர்ந்து நடந்து வருகிறது. புதுவை மாநிலத்தில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளேன். அதற்காக தனியாக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பெண்கள் அளிக்கும் புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களுக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளேன்.

புதுவையில் பல கொலை குற்றங்கள் ரவுடிகளால் அரங்கேறி வருகிறது. அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும், கொலை செய்வதுமாக உள்ளனர். சிறையில் இருந்து வெளியே வரும் ரவுடிகளை மற்ற ரவுடிகள் கொலை செய்வது போன்ற சம்பவம் ஏற்படுகிறது. எனவே ரவுடிகளை கண்டறிந்து அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். தற்போது சுமார் 30-க்கும் மேற்பட்ட ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். புதுவையில் அமைதியை நிலை நாட்ட வேண்டியது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் கடமையாகும். அதற்கான வேலைகளை அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்