புதுவையில் பலத்த மழை: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுவையில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Update: 2019-12-01 22:15 GMT
புதுச்சேரி,

புதுவையில் நேற்று முன் தினம் காலை முதல் மாலை வரை பலத்த மழை பெய்தது. மாலையில் சிறிது நேரம் மழை ஓய்ந்தது. பின்னர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு பெய்யத்தொடங்கிய மழை நேற்று காலை வரை விடாது பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை நேற்று காலை 11.30 மணி வரை நீடித்தது.

இதனால் கிருஷ்ணாநகர், ரெயின்போநகர், பாவாணர் நகர், பூமியான்பேட்டை, காந்திநகர், கோவிந்தசாலை, வசந்தம்நகர், வேல்ராம்பேட், புஸ்சி வீதி, தேங்காய்திட்டு சாலை, வசந்தம் நகர், மரப்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை உள்பட நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த வீடுகளில் இருந்தவர்கள் வாளிகள் மூலம் தங்கள் வீடுகளில் தேங்கி நின்ற தண்ணீரை இறைத்து வெளியேற்றினர்.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பொதுப்பணிதுறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று ராட்சத மோட்டார்கள் உதவியுடன் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. நகரில் முக்கியமான சாலைகளில் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றதை காண முடிந்தது.

இந்த நிலையில் பொதுப் பணித்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேற்று மதியம் இந்திராகாந்தி சிலை அருகே சென்று மழைநீரை வெளியேற்ற ஊழியர்கள் மேற்கொண்ட பணிகளை பார்வையிட்டார். அப்போது அவருடன் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

பின்னர் அமைச்சர் நமச்சிவாயம், அதிகாரிகளிடம் மழைநீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அப்போது அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே அமைச்சர் நமச்சிவாயம் சாலையில் தேங்கி நின்ற மழைநீரில் இறங்கி போக்குவரத்தை சீரமைத்தார்.

இதே போல் மரப்பாலம் சந்திப்பில் மழைநீர் தேங்கி நின்றது. தேங்காய்திட்டு சாலையில் இடுப்பளவுக்கு தண்ணீர் சென்றது. உடனே அரசு செயலாளர் சுர்பீர் சிங், உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் பொக்லைன் எந்திர உதவியுடன் தேங்காய்திட்டு செல்லும் சாலையில் உள்ள வாய்க்காலில் தூர்வாரி அதில் இருந்த அடைப்புகள் அகற்றப்பட்டன. அதன் பிறகே அங்கு நிலைமை சீரானது.

இந்த மழையால் சுய்ப்ரேன் வீதியில் அமைச்சர் ஷாஜகான் வீட்டின் அருகில் ஒரு மரம் சாய்ந்து விழுந்தது. இதே போல் தியாகராஜர் வீதி, இளங்கோ நகர் பகுதியிலும் மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இது பற்றிய தகவல் அறிந்த உடன் பொதுப்பணித்துறை, உள்ளாட்சி துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று மரங்களை துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

இந்த தொடர்மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். நேற்று மதியத்திற்கு பின்னர் மழையின் தாக்கம் குறைந்தது.

புதுவையில் நேற்றுமுன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை 11.4 செ.மீ. மழையும், நேற்று காலை 8.30 மணி முதல் நேற்று மாலை 5.30 மணி வரை 4.1. செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மிஷன்வீதியில் உள்ள அரசு பள்ளியில் நிவாரண மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்கு 25 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வருவாய்துறை சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த மழையின் காரணமாக நேற்று காலை புதுவை மரப்பாலம், இந்திராகாந்தி சிலை, ராஜீவ்காந்தி சிலை, புஸ்சி வீதி உள்பட நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பணியில் ஈடுபட்ட போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட சன்னியாசிகுப்பம் பிடாரிக்குப்பத்தை சேர்ந்தவர் கதிரவன். இவருடைய வீடு நேற்று முன்தினம் பெய்த பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின்போது அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்