பெருமாநல்லூர் அருகே, தடுப்புச்சுவரில் கார் மோதியது: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

பெருமாநல்லூர் அருகே தடுப்புச்சுவரில் கார் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். திருமணத்துக்கு சென்று விட்டு காரில் வீடு திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்தது.

Update: 2019-12-02 23:15 GMT
பெருமாநல்லூர், 

ஈரோடு வீரப்பன்சத்திரம், அசோகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மோகன்(வயது 50). இவருடைய மனைவி கவிதா(42). இவர்களது மகன் பரத்(24). இவர் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்தார்.

மோகனின் தம்பி லோகநாதன்(47). அவரது மகன் அமர்நாத்(11). மோகனும், லோகநாதனும் அந்த பகுதியில் மருந்துக்கடை வைத்து நடத்தி வந்தனர். இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் மோகனின் மகள் இந்துஜாவின் கணவர் சாந்தகுமாரின் சகோதரர் தினேஷ்குமாரின் திருமணத்திற்காக காரில் கோவை மாவட்டம் சூலூர் சென்றனர். அங்கு திருமணம் முடிந்து நேற்று காலை 10 மணியளவில் மீண்டும் ஈரோடு செல்வதற்காக கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வந்து கொண்டிருந்தனர். காரை லோகநாதன் ஓட்டி வந்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே வலசுப்பாளையம் பிரிவு பக்கம் வந்த போது கார் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதில் எதிர்பாராதவிதமாக சாலையின் பக்கவாட்டு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரின் முன் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த லோகநாதன், மோகன் ஆகியோரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே லோகநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனின்றி மோகனும் இறந்தார்.

விபத்தில் படுகாயம் அடைந்த கவிதா மற்றும் அமர்நாத் மீட்கப்பட்டு திருப்பூரிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர்கள் இருவரும் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

சம்பவ இடத்தில் இறந்த பரத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக அவினாசிஅரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்