வடகிழக்கு பருவமழை தீவிரம்: மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் தீயணைப்பு துறையினர்

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் தர்மபுரி மாவட்டத்தில் மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் உள்ளனர்.

Update: 2019-12-02 22:45 GMT
தர்மபுரி,

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதன்காரணமாக ஆங்காங்கே ஏரிகள், குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உரிய உபகரணங்களுடன் மீட்பு பணிகளுக்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தீயணைப்புதுறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

இதன்படி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 6 தீயணைப்பு நிலையங்களிலும் தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வடகிழக்கு பருவமழையால் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக தேவையான மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர். ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் மரங்களை வெட்டும் கருவிகள், ஏணி, கயிறு, ரோப்லாஞ்சர், லைப்ஜாக்கெட், ஏர்டியூப்கள் உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

கமாண்டோ வீரர்கள்

தர்மபுரி மாவட்ட அளவில் பேரிடர் காலங்களில் மீட்பு பணியை மேற்கொள்ள சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு படையை சேர்ந்த 21 கமாண்டோ வீரர்கள் மாவட்ட தலைநகரான தர்மபுரியில் 24 மணிநேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் மாவட்டத்தின் எந்த பகுதியில் மழை பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று உரிய மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த் தெரிவித்தார்.

இதேபோல் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ராஜா (தர்மபுரி), சுப்பிரமணி (பென்னாகரம்), திருக்கோல்நாதர் (பாலக்கோடு), பழனிசாமி(அரூர்), ஜெயச்சந்திரன் (ஒகேனக்கல்), செல்வமணி (பாப்பிரெட்டிப்பட்டி) ஆகியோர் தலைமையில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்