படப்பை அருகே குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி

படப்பை அருகே வரதராஜபுரம் ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் அதிக அளவில் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2019-12-02 22:15 GMT
படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பை அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட மழை காலங்களில் இப்பகுதி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கி அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஆதனூர் வரதராஜபுரம் ஆகிய பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனை தொடர்ந்து வெள்ளம் ஏற்பட காரணமாக இருந்த பகுதிகளை அதிகாரிகள் பார்வையிட்டு அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை சீரமைத்தனர்.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் படப்பையை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் பாலாஜி நகர், முல்லைநகர், கிருஷ்ணநகர், பரத்வாஜ் நகர், மகாலட்சுமி நகர், முல்லைநகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், ஸ்ரீராம் நகர், சாந்தி நிகேதன் நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்களில் மழைநீர் அதிக அளவில் தேங்கி வடியாமல் காணப்படுகிறது.

பொதுமக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் தவித்து வருகின்றனர். இதனால் குடியிருப்புகளில் பாம்பு, ஆமை, விஷ வண்டுகள் வந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்த நிலையில் மழைநீர் தேங்கி நிற்கும் இந்த பகுதியில் அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற போதிய நடவடிக்கை எடுத்து வந்தாலும் முழுமையாக நீர் வெளியேற முடியாமல் தேங்கிய நிலையில் உள்ளது. இதே நிலை நீடித்தால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில்:-

மகாலட்சுமி நகர் முதல் பெருங்களத்தூர் வரை உள்ள அடையாறு கால்வாயை அகலபடுத்தும் கரையை பலப்படுத்தியும் சாஸ்திரி நகர் முதல் ராயப்பா நகர் வரை துணைக்கால்வாய் அமைத்து குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீரை அடையாறு கால்வாய்களில் இணைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதி முழுவதும் வெள்ளத்தில் பாதிப்படைந்த நிலையில் தற்போது வரை நிரந்தரமாக மழைநீர் வெளியே செல்ல தீர்வு காணப்படவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் மழை காலங்களில் தற்காலிகமாக மழை நீரை வெளியேற்ற பல லட்சம் ரூபாய் செலவு செய்வது தேவையற்றது என அந்த பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்