மராட்டியத்தில் அவசரம் அவசரமாக பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. புதுவிளக்கம்- பரபரப்பு

மராட்டியத்தில் அவசரம், அவசரமாக பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என்பதற்கு முன்னாள் மத்திய மந்திரி அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. புது விளக்கம் அளித்துள்ளார். இது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2019-12-02 23:52 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யாக இருப்பவர் அனந்தகுமார் ஹெக்டே. பா.ஜனதாவை சேர்ந்த இவர் முன்னாள் மத்திய மந்திரி ஆவார். இவர் அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது வாடிக்கை. அரசியல் சாசனத்தை மாற்றவே தாங்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக ஓராண்டுக்கு முன்பு அவர் பேசினார். சர்ச்சையை ஏற்படுத்திய அவரது பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

தனது இந்த பேச்சுக்காக நாடாளுமன்றத்தில் வருத்தம் தெரிவித்தார். அதன் பிறகு முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் அதிரடியான அரசியல் திருப்பங்கள் நடைபெற்றது. தேவேந்திர பட்னாவிஸ் கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். 80 மணி நேரத்திற்கு பிறகு அவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளார்.

இந்த நிலையில் மராட்டியத்தில் அவசரம் அவசரமாக பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன் என்பது குறித்து அனந்தகுமார் ஹெக்டே எம்.பி. புது விளக்கம் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர கன்னடா மாவட்டம் எல்லாப்பூர் தொகுதியில் கடந்த நவம்பர் மாதம் 30-ந் தேதி கர்நாடக சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது அவர் இதை கூறினார். அவர் பேசிய இந்த பேச்சு அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள அனந்தகுமார் ஹெக்டேயின் பேச்சு விவரம் வருமாறு:-

மராட்டிய மாநிலத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் 80 மணி நேரம் முதல்-மந்திரியாக இருந்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். உடனே அவர் ராஜினாமா செய்துவிட்டார். நாங்கள் எதற்காக இந்த நாடகத்தை நடத்தினோம்?. எங்களுக்கு தெரியாதா?. எங்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்று தெரிந்தும், தேவேந்திர பட்னாவிஸ் எதற்காக முதல்-மந்திரி ஆக்கப்பட்டார்?. இந்த கேள்வியை பொதுவாக ஒவ்வொருவரும் கேட்கிறார்கள்.

அங்கு ரூ.40 ஆயிரம் கோடி நிதி முதல்-மந்திரியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி அரசு அமைந்துவிட்டால், அந்த நிதி வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படாது, அது தவறாக பயன்படுத்தப்படும் என்று நினைத்தோம். இந்த நிதியை பாதுகாக்க, நாங்கள் முன்பே இதற்காக திட்டமிட்டோம். 3 கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவு எங்களுக்கு தெரிந்ததும், நாங்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்ற முடிவு செய்தோம்.

சில விஷயங்களை சரிசெய்து, தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவர் பதவி ஏற்ற 15 மணி நேரத்திற்குள் நுட்பமாக செயல்பட்டு அந்த நிதி, எங்கு போய் சேர வேண்டுமோ அங்கு பாதுகாப்பாக போய் சேர்ந்துவிட்டது. அதாவது ஒட்டுமொத்த அந்த நிதியும் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது. ஒருவேளை அந்த நிதியை திருப்பி அனுப்பாமல் இருந்திருந்தால், அடுத்து வந்த முதல்-மந்திரி அதை என்ன செய்திருப்பார் என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அனந்தகுமார் ஹெக்டே பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்