17 பேர் பலியான விவகாரம்: மு.க.ஸ்டாலின் அரசியல் செய்கிறார் - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

17 பேர் பலியான விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Update: 2019-12-03 22:30 GMT
மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் பலியான இடத்தை நேரில் பார்வையிட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தடுப்பு சுவர் உரிமையாளர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது?

பதில்:- அவர் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருக்கின்றார். சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இதுகுறித்து கருத்து தெரிவிக்க இயலாது.

கேள்வி:- இது தீண்டாமை சுவர் என கூறப்படுகிறதே?

பதில்:- சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- தடுப்பு சுவர் உரிமையாளர் மீது கடுமையான சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்:- சம்பந்தப்பட்ட நபரை காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். சட்டத்தில் என்ன பிரிவுகள் உள்ளதோ அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- இந்த விபத்துக்கு அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?

பதில்:- மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு முறையும் இதுபோலத்தான் குற்றம் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் அரசியல் செய்கிறார், மனசாட்சியோடு எண்ணிப்பார்க்க வேண்டும். எதில் தான் அரசியல் செய்வது என்று ஒரு விதிவிலக்கு இல்லையா? இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எந்த வகையில் மனிதாபிமானத்தோடு உதவி செய்ய வேண்டுமோ, அந்த வகையில் அரசு உதவி செய்யும். அந்த அடிப்படையில் தான் நான் இந்த கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன். இதில் எல்லாம் அரசியலை நுழைக்க கூடாது.

கேள்வி:- தடுப்பு சுவர் பாதுகாப்பு இல்லாதது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையே?.

பதில்:- புகார் கொடுத்தார்களா? இல்லையா?. புகார் கொடுக்கும் போது எந்த அதிகாரிகள் இருந்தனர் என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டியின்போது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட கலெக்டர் ராஜாமணி உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்