சென்னை தியாகராயநகரில், சேகர்ரெட்டி கட்டிடத்தில் தீ விபத்து - முக்கிய ஆவணங்கள் நாசம்

சென்னை தியாகராயநகரில் உள்ள தொழில் அதிபர் சேகர்ரெட்டிக்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தில் நேற்று தீ விபத்து நடந்தது. இதில் முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

Update: 2019-12-03 23:00 GMT
சென்னை,

அ.தி.மு.க. பிரமுகரும், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு நிர்வாகியுமான சேகர்ரெட்டி, அவரது சகோதரர் சீனிவாச ரெட்டி மற்றும் அவர்களின் நண்பர்களுக்கு சொந்தமான, வீடு, அலுவலகங்களில் கடந்த 2016-ம் ஆண்டு வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

ஜெயலலிதா மறைந்த மறுநாளே நடந்த இந்த அதிரடி சோதனை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரொக்கப்பணம் மற்றும் 100 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சேகர்ரெட்டிக்கு சொந்தமான 4 மாடி கட்டிடம் சென்னை தியாகராயநகர் விஜயராகவா சாலையில் செயல்பட்டு வருகிறது. கட்டிடத்தின் 4-வது தளத்தில் ‘ஜெ.எஸ்.ஆர். இன்ப்ராஸ்டரக்சர்’ என்ற பெயரில் கட்டுமான அலுவலகம் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் இருந்து நேற்று காலை திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிறிதுநேரத்தில் திடீரென அந்த அலுவலகம் தீப்பிடித்து எரிய தொடங்கியது. வெப்பத்தால் அலுவலகத்தின் கண்ணாடி ஜன்னல்கள் பயங்கர சத்தத்துடன் சுக்குநூறாக வெடித்து சிதறியது.

இதனை கண்டு பதறிப்போன கட்டிடத்தின் பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு கட்டுப்பாட்டு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே தியாகராயநகர், தேனாம்பேட்டை நிலையங்களில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்கள் மூலம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். முதல்கட்டமாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் ‘ஹை-லிப்ட்’ எந்திரம் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

முதலில் ‘போர்ம்’ நுரையை பீய்ச்சியும், அதனைத்தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தீயை கட்டுப்படுத்த முயன்றனர். சுமார் 1 மணி நேரம் போராடி கட்டிடத்தில் பரவிய தீயை முழுமையாக கட்டுப்படுத்தினர். அலுவலகம் தொடங்கும் நேரத்துக்கு முன்பாக இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அலுவலகத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவே இந்த தீ விபத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது. எனினும் இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பாண்டிபஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த எதிர்பாராத தீ விபத்தில் அலுவலகத்தில் இருந்த கணினி உள்ளிட்ட மின்சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

இந்த தீ விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பாக பேசப்பட்டது.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த சேகர்ரெட்டி, சென்னை ஐ.சி.எப். தொழிற்சாலையில் தினக்கூலியாக வேலை பார்த்தவர். ரெயில்வே ஒப்பந்ததாரர்களுக்கு ஆட்களை ஏற்பாடு செய்து கொடுத்து கமிஷன் பெற்று வந்த அவர், ஒருகட்டத்தில் ரெயில்வே ஒப்பந்தங்களை பெற தொடங்கினார். 1994-ம் ஆண்டு அ.தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினரானார். அதனைத்தொடர்ந்து கனிமவளங்கள், மணல்குவாரி ஒப்பந்தங்கள் என அடுத்தடுத்து சேகர்ரெட்டி தொழில் அதிபராக வளர்ச்சி அடைந்தார். திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

இந்த நிலையில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்த மறுநாளே வருமானவரித்துறை அதிகாரிகள் சேகர்ரெட்டி வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல கோடி மதிப்பிலான புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மற்றும் 100 கிலோவுக்கு அதிகமான தங்கம் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2016-ம் ஆண்டு டிசம்பர் 21-ந்தேதி சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் வகித்து வந்த திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு பதவியும் பறிக்கப்பட்டது. தற்போது திருப்பதி புதிய அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டியின் பெயர் மீண்டும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் தமிழகத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தான குழு தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்