நெஞ்சு வலியால், பெண் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம்: மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு உறவினர் கைது - கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டியது அம்பலம்

நெஞ்சு வலியால் பெண் ஒருவர் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணின் மகன் கொடுத்த தகவலால் 3 மாதங்களுக்கு பிறகு அவருடைய உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் அந்த பெண்ணை தீர்த்து கட்டியது அம்பலமாகி உள்ளது.

Update: 2019-12-03 23:36 GMT
பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா சின்னய்யனபாளையாவை சேர்ந்தவர் தேவராஜூ. இவருடைய மனைவி சுமலதா. இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி சுமலதா தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் நெஞ்சு வலியால் இறந்திருக்கலாம் என்று குடும்பத்தினர் கருதினர். அதன்பிறகு அவருடைய உடல் புதைக்கப்பட்டது.

இந்த நிலையில் சுமலதாவின் மகன் தனது தாய் கொலை செய்யப்பட்டு உள்ளதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தான். மேலும் உறவினர் வெங்கடேஷ் என்பவர் தான் கொலை செய்ததாக அவன் கூறினான். இதுபற்றி சுமலதாவின் தாய் கவுரம்மா, ஆனேக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொண்டனர்.

மேலும் நேற்று போலீசார் வெங்கடேசை பிடித்து விசாரித்தனர். அப்போது சுமலதாவை கொலை செய்ததை வெங்கடேஷ் ஒப்புக்கொண்டார். அதாவது வெங்கடேசும், சுமலதாவும் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இந்த வேளையில் தன்னுடன் வந்துவிடும்படி சுமலதாவிடம், வெங்கடேஷ் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக செப்டம்பர் மாதம் 18-ந் தேதி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேஷ் சேலையால் அவருடைய கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதை சுமலதாவின் மகன் பார்த்துள்ளான். இருப்பினும் தொடக்கத்தில் வெளியில் சொல்லாத சுமலதாவின் மகன் தற்போது சம்பவம் குறித்து தெரிவித்ததன் அடிப்படையில் வெங்கடேசை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. கைதான வெங்கடேசுக்கு, சுமலதா அத்தை முறையாகும்.

இதையடுத்து நேற்று போலீசார் சின்னய்யனபாளையாவில் சுமலதா புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்றனர். அதன்பிறகு அவருடைய உடலை போலீசார் தோண்டி எடுத்தனர். அதையடுத்து டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்