அம்மாபேட்டை அருகே காப்புக்காட்டில் ‘ஏர்கன்' வைத்து வேட்டையாட முயன்ற 3 பேர் கைது - ரூ.50 ஆயிரம் அபராதம்

அம்மாபேட்டை அருகே காப்புக்காட்டில் ஏர்கன் வைத்து வேட்டையாட முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்து, ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.

Update: 2019-12-04 22:30 GMT
அம்மாபேட்டை, 

அம்மாபேட்டை அருகே குறிச்சியில் காப்புக்காடு உள்ளது. சென்னம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட இந்த காட்டில் முயல், மான் மற்றும் பறவைகள் அதிக அளவில் வசிக்கின்றன. இந்தநிலையில் காட்டுக்குள் விலங்குகளை வேட்டையாட சிலர் சுற்றுவதாக சென்னம்பட்டி வனச்சரகர் செங்கோட்டையனுக்கு நேற்று தகவல் கிடைத்தது. உடனே அவர் வன ஊழியர்களுடன் குறிச்சி காட்டுக்குள் ரோந்து சென்றார்.

அப்போது 3 வாலிபர்கள் கையில் ஒரு ஏர்கன் (இரும்பு பால்ரஸ் குண்டுகளை பயன்படுத்தி சுடுவது) வைத்துக்கொண்டு சுற்றினார்கள். வனத்துறையினரை பார்த்ததும் அவர்கள் தப்பி ஓட முயன்றார்கள்.

உடனே வனத்துறையினர் 3 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையத்தை சேர்ந்த சரத்குமார் (வயது 26), கணேசன் (36), குணசேகரன் (25) என்பதும், அவர்கள் ஏர்கன்னை பயன்படுத்தி விலங்குகளை வேட்டையாட வந்ததும் தெரிந்தது. இதைத்ெதாடர்ந்து 3 பேரையும் ைகது செய்த வனத்துறையினர், அவர்களை ஈரோடு மாவட்ட வன அதிகாரி விஸ்மஜூவிஸ்வநாதன் முன் ஆஜர்படுத்தினார்கள். அவர் விசாரணை நடத்தி 3 பேருக்கும் சேர்த்து ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார். ஏர்கன் துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்