அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நின்று ஆர்ப்பாட்டம்

பூதலூர் அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீரில் நின்றபடி மக்கள் உரிமை கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-04 23:00 GMT
திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் பூதலூரில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்த பரிசோதனை மையம், பல் மருத்துவ பிரிவு ஆகிய இடங்களில் தேங்கி கிடக்கும் மழைநீரில் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீரை கடந்து தான் மருத்துவமனைக்குள் செல்ல வேண்டி இருப்பதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

மழைநீர் தேக்கம் குறித்து மருத்துவமனை நிர்வாகிகளிடம் பல முறை புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் உரிமை கூட்டமைப்பினர் நேற்று மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழைநீரில் நின்றபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

ஆர்ப்பாட்டத்துக்கு மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி, அருண்மாசிலாமணி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டு மழைநீரை அப்புறப்படுத்தி மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ‌‌ஷம் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் சிவக்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுரே‌‌ஷ், பாலு, அரசு மருத்துவனை மருத்துவ அலுவலர் தேவேந்திரன் ஆகியோர் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்புறப்படுத்தும் பணி

இதைத்தொடர்ந்து கழிவுநீர் அகற்றும் வாகனம் மூலமாக மழைநீரை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதன் காரணமாக ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. மக்கள் உரிமை கூட்டமைப்பினரின் திடீர் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்