புதுச்சேரி அரசின் நலத் திட்டங்களில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் - காரைக்கால் கலெக்டர் தகவல்

புதுச்சேரி அரசின் நலத் திட்டங்களில், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா கூறினார்.

Update: 2019-12-04 22:15 GMT
காரைக்கால்,

புதுச்சேரி அரசின் சமூக நலத் துறை சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா, காரைக்கால் நகராட்சி கலையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மாவட்ட கலெக்டர் விக்ராந்த் ராஜா தலைமை தாங்கி பேசியதாவது:-

மாற்றுத் திறனாளிகள் என்று சொல்வதைக் காட்டிலும், சிறப்புத் திறனாளிகள் என்றே சொல்லவேண்டும். பிறருக்குத் தன்னம்பிக்கையை தரக்கூடியவர்களாகவும் இவர்கள் உள்ளனர். மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை புதுச்சேரி முதல்-அமைச்சர், மற்றும் அமைச்சரிடம் மாவட்ட நிர்வாகம் நிச்சயம் கொண்டு செல்லும்.

மாற்றுத் திறனாளிகள் நல்வாழ்வுக்கு அரசிடம் நிறைய திட்டங்கள் உள்ளன. காரைக்காலில் உள்ள பல்வேறு நிறுவனங்களை அழைத்து, மாற்றுத் திறனாளிகளுக்கு பிரத்யேகமாக வேலை வழங்கக் கூடிய வகையில் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாலை 5 முதல் 6 மணி வரை பொதுமக்கள் குறை கேட்கப்படுகிறது. பிரசசி்னைகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தால், அவற்றை ஆராய்ந்து தீர்வுகாண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சமூக நலத்துறை மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யப்படும் திட்ட உதவிகள் குறித்து சமூக நலத்துறை உதவி இயக்குனர் சத்யா விளக்கிப் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் சாகுல்ஹமீது, பொதுச் செயலர் நடேச வைத்தியநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, இந்நிகழ்ச்சியையொட்டி, மாற்றுத் திறனாளிகளிடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் சமூக நலத்துறை நல அதிகாரி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்