காவேரிப்பட்டணம் அருகே, லாரி மீது சொகுசு பஸ் மோதி ஒருவர் பலி - 15 பேர் படுகாயம்

காவேரிப்பட்டணம் அருகே லாரி மீது சொகுசுபஸ் மோதி ஒருவர் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-04 22:45 GMT
காவேரிப்பட்டணம், 

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு நோக்கி தனியார் சொகுசுபஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள போத்தாபுரம் என்ற இடத்தில் வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது.

இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த திருச்சி மாவட்டம் குண்டூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் (வயது 56) என்பவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதே போல பஸ்சில் இருந்த 9 பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் மற்றும் கிரு‌‌ஷ்ணகிரி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விபத்தில் பலியான நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் பிரபாகர் கிரு‌‌ஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். இந்த விபத்து தொடர்பாக காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்