கழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு, நகரசபை அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை

பாதாள சாக்கடை கழிவுநீர் தெருக்களில் ஓடுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறி ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-04 22:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் நகராட்சி 30-வது வார்டில் உள்ள திவான் நாராயணசாமி கிழக்கு தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவு நீர் தொட்டிகள் நிரம்பி சாலைகளிலும், தெருக்களிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது. சாக்கடை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் அப்பகுதியினர் நடமாட முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அப்பகுதியினர் திரளாக குடும்பத்துடன் வந்து ராமநாதபுரம் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு இருந்த நகரசபை ஆணையாளர் விஸ்வநாதனை சந்தித்து முறையிட்டனர். அதனைத் தொடர்ந்து கழிவுநீரை அகற்ற ஆணையாளர் உறுதியளித்தார். பொதுமக்களின் திடீர் முற்றுகையால் நகரசபை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதே போன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை தொட்டிகள் நிரம்பி தெருக்களிலும், சாலைகளிலும் வழிந்தோடுகின்றன. பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டதால் ஏற்கனவே இருந்த கழிவுநீர் வாய்க்கால்களை மூடிவிட்டதாலும், மழைநீர் வடிகால் வசதி இல்லாததாலும் மழைநீர் பாதாள சாக்கடை தொட்டிகளில் புகுந்ததாலும் அனைத்து பகுதிகளிலும் இவ்வாறு கழிவுநீர் வெளியேறி வருகிறது.

நகரசபை நிர்வாகத்தினர் நவீன எந்திரத்தை பயன்படுத்தி கழிவுநீர் தொட்டிகளில் உள்ள அடைப்புகளை நீக்கவும், கழிவு நீரேற்று நிலையங்களில் உள்ள மோட்டார்களை முழுமையாக இயக்கி அனைத்து தண்ணீரையும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பு பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவும் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்