ஜெயலலிதா நினைவு நாள்: சேலத்தில் அ.தி.மு.க.வினர் மவுன ஊர்வலம்

ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது.

Update: 2019-12-05 22:15 GMT
சேலம், 

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலத்தில் அ.தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்ற மவுன ஊர்வலம் நடந்தது. இதற்காக சேலம் அண்ணா பூங்கா முன்பு ஏராளமான அ.தி.மு.க.வினர் திரண்டனர்.

இதைத்தொடர்ந்து சேலம் 4 ரோடு பகுதியில் இருந்து காலை 10 மணிக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் மவுன ஊர்வலம் புறப்பட்டு அண்ணா பூங்காவை வந்தடைந்தது.

இதையடுத்து அண்ணா பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா நினைவு மணி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர். உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது ஜெயலலிதாவின் புகழ் ஓங்குக..! என அ.தி.மு.க.வினர் கோ‌‌ஷம் எழுப்பினார்கள்.

மேலும் பெண்கள் சிலர் ஜெயலலிதாவின் சிலைக்கு அஞ்சலி செலுத்தியபோது கைகளை கும்பிட்டு கதறி அழுதனர். பின்னர், அ.தி.மு.க நிர்வாகிகள் அனைவரும் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். மேலும், ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் மக்கள் நலப்பணிகளை தொடரவும், உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அ.தி.மு.க. வெற்றிக்கு அயராமல் உழைத்திடவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நினைவு நாள் மவுன ஊர்வலத்தில், சேலம் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், மாநகர் மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், துணை செயலாளர் பாலு, பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, சண்முகம், கூட்டுறவு சங்க தலைவர்கள் சதீஷ்குமார், வேபிரிட்ஜ் ராஜேந்திரன், கே.சி.செல்வராஜ், ராமராஜ், ஜான்கென்னடி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கே.ஏ.கே.கனகராஜ் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர். மேலும் மாநகரில் உள்ள 60 வார்டுகளிலும் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மேலும் செய்திகள்