அக்னி ஆற்றில் மணல் கடத்தல்: ரூ.7½ கோடியில் கட்டப்பட்ட தடுப்பணைக்கு ஆபத்து விவசாயிகள் கவலை

அக்னி ஆற்றில் மணல் கடத்தல் தொடர்ந்து நடப்பதால் ரூ.7½ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலையுடன் கூறுகிறார்கள்.

Update: 2019-12-05 23:00 GMT
ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் அருகே உள்ள நெய்வேலி அக்னி ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவது தொடர்ந்து நடக்கிறது. பொக்லின் எந்திரம் மூலம் ஆற்றில் உள்ள மணல் திட்டுகளை வெட்டி லாரி, மாட்டு வண்டி ஆகியவை மூலம் வெளியூர்களுக்கு கடத்தி செல்வதாகவும், இதனால் நெய்வேலியில் அக்னி ஆற்றின் குறுக்கே ரூ.7 கோடியே 45 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.

இந்த தடுப்பணைக்கு அருகிலேயே மணல் வெட்டி எடுக்கப்பட்டு வருவதால் மண் அரிப்பு ஏற்பட்டு தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படும் பட்சத்தில் நெய்வேலி பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் என்றும், இந்த பகுதியில் கடும் வறட்சி ஏற்பட்டு தண்ணீர் தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் கூறுகிறார்கள்.

தடுக்க நடவடிக்கை

இரவு-பகல் என எந்த நேரமும் லாரிகளில் மணல் கடத்துபவர்கள் வாகனங்களை கட்டுப்பாடு இன்றி இயக்குவதால் ஈச்சன்விடுதி பாலம் மற்றும் அந்த பகுதியில் உள்ள சில பாலங்கள் மற்றும் சாலைகள் சேதம் அடைந்து விட்டதாகவும், இரவு நேரங்களில் மணல் லாரிகள் அதிக வேகத்துடன் இயக்கப்படுவதால் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நெய்வேலி அக்னி ஆற்றில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மணல் கடத்தலை தடுத்து, தடுப்பணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்