கேட்டாலே கண்ணீர் வரும்: திருப்பூரில் வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை - மேலும் விலை உயரும் அபாயம்

திருப்பூரில் வெங்காயம் கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை உயரும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-12-05 22:30 GMT
திருப்பூர், 

ஆந்திரா, கர்நாடகா மற்றும் மராட்டியம் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழக பகுதிகளுக்கு வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில் மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்து வரும் வெங்காயம் முதல் தரமாக கருதப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து வரும் வெங்காயமும், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் வெங்காயமும் இருக்கிறது.

தற்போது வெங்காய வரத்து முற்றிலும் குறைந்து போன காரணத்தினால் தான் இந்த விலை உயர்வை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அடுத்த விளைச்சலுக்கு அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், அதற்கு இடைப்பட்ட நாட்களில் வெங்காயம் தங்கத்தை விட பெரிதும் போற்றப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது.இதை சித்தரிக்கும் வகையில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகள் பதிவிடப்பட்டு வருகின்றன. வெங்காயத்தை லாக்கரில் வைப்பது போலவும், திருமணத்தின்போது பெண்களுக்கு வெங்காயத்தை வரதட்சணையாக வழங்குவது போலவும் சித்தரிக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும் என்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் விலையை கேட்டாலே கண்ணீர் வந்துவிடும் என்று இல்லத்தரசிகள் கிண்டலாகவும் பேசுகின்றனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு தினசரி 130 டன் பெரிய வெங்காயமும்,20 டன் சின்ன வெங்காயமும் விற்பனைக்கு வந்தது. அதன்பின்னர் வரத்து படிப்படியாக குறைந்து கடந்த 2 நாட்களாக வரத்து இல்லை. இதனால் கடந்த வாரம் ரூ.100-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை நேற்று ரூ.150 ஆக உயர்ந்து விட்டது.இது வரலாறு காணாத விலை உயர்வாகும். அதுபோல்திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து 2 டன் சின்ன வெங்காயம் (புதியது) விற்பனைக்கு வந்துள்ளது. ஈரப்பதத்துடன் காணப்படும் இதன் விலையும் கிலோ ரூ.150 ஆகவே உள்ளது. இதனால் மளிகை கடை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் வெங்காயம் வாங்காமலே திரும்பி சென்றனர்.

மார்க்கெட்டில் விற்கும் விலையில் இருந்து கிலோவுக்கு ரு.10 வரை உயர்த்தி கடைகளில் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை விரைவில் ரூ.200-ஐ தொட்டு விடும் என்று இல்லத்தரசிகள் கவலையுடன் தெரிவித்தார்.

தற்போது புனே நகரில் பெரிய வெங்காயம் விளைச்சல் உள்ளது. ஆனால் அங்கே கொள்முதல் விலையே ரூ.150 ஆக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து வெங்காய மொத்த வியாபாரிகள் சிலரிடம் கேட்ட போது “ மழையில் நனைந்த நிலையில் ஈரப்பதத்துடன் விற்பனைக்கு வந்த வெங்காயத்தை தனியாக எடுத்து வைத்திருந்தோம். கடந்த 2 நாட்களாக மழை இல்லாததால் அவற்றைவெயிலில் காயவைத்துள்ளோம். தற்போது பெரிய வெங்காயம் இருப்பு இல்லாதால் அந்த வெங்காயத்தை விற்க முடிவு செய்துள்ளோம். மேலும் புனே நகரில் விலை அதிகமாக இருப்பதால், மேலும் வெங்காயம் விலை உயர வாய்ப்புள்ளது.” என்றனர்.

கடந்த 2000-ம் ஆண்டில் இதுபோன்ற தட்டுப்பாடு ஏற்பட்ட சமயத்தில் வெங்காயம் அதிகபட்சமாக கிலோ ரூ.100 வரை விற்கப்பட்டது. அந்த சமயத்தில் தமிழகத்தில் பலர் வசதி படைத்தவர்களாகவும் மாறி இருக்கின்றனர். அதற்கு உதாரணமாக அவர்கள் வாங்கி இருந்த லாரிகளில் வெங்காயம் தந்த செல்வம் என்று பதிவு செய்து இருந்தனர். இது நெல்லை மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஆகும்.

அதேபோல், கடந்த 2010-ம் ஆண்டில் இதுபோன்ற நிலைமை ஏற்பட்டது. அப்போது ஒரு கிலோ ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெங்காயம் தட்டுப்பாட்டால் சற்று விலை உயர்ந்து இருந்தது. அதற்கு அடுத்தபடியாக தற்போது விலை உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்