தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு - எடப்பாடி பழனிசாமி பேட்டி

தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை எதிர்த்து தி.மு.க. வழக்கு தொடர்ந்துள்ளது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2019-12-06 23:15 GMT
சேலம், 

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்திற்கு பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்றைய தினம் உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தலை நடத்த எந்த தடையும் இல்லை என்றும், 9 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும். இந்த தேர்தல் முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

உள்ளாட்சி தேர்தலில் எங்களை முழுமையாக ஈடுபடுத்தி வெற்றி பெறுவதற்கான பணிகளில் ஈடுபடுவோம். பொதுவாக தேர்தல் அறிவித்தபிறகு மக்களை சந்தித்து வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். ஆனால் தோல்வி பயம் காரணமாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார். இதனால் தி.மு.க.விற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.

எங்களை பொறுத்தவரையில் உள்ளாட்சி தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். உள்ளாட்சி தேர்தல் குறித்து கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி, யார்? யார்? எந்த வார்டில் போட்டியிடுவது என்று பேசி முடிவு செய்வோம். அதன்பிறகு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஜி.வெங்கடாஜலம், வெற்றிவேல், ராஜா, சின்னதம்பி, மருதமுத்து, மனோன்மணி, சித்ரா, முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட அ.தி.மு.க. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், கூட்டுறவு வங்கி தலைவர்கள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து எடப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், வீரபாண்டி, ஏற்காடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

முன்னதாக சேலம் நெடுஞ்சாலை நகர் முகாம் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

மேலும் செய்திகள்