உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றம்

உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2019-12-06 22:15 GMT
ஈரோடு, 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதியும், 30-ந் தேதியும் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 6-ந் தேதி (நேற்று) தொடங்கி 13-ந் தேதி வரை நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தன. தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களும் களமிறங்க ஆர்வத்துடன் உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுக்களை பெறுவதற்காக தேர்தல் அதிகாரிகள் நேற்று காலையில் தயார் நிலையில் இருந்தனர்.

இந்தநிலையில் மறு அறிவிப்பு வரும் வரை வேட்பு மனுக்களை பெற வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு குறித்து அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் அதிகாரிகள் வேட்பு மனுக்களை பெறவில்லை. ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய பலரும் வந்திருந்தனர். அவர்களிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அவர்கள் முதல் நாளிலேயே வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

வேட்பு மனு தாக்கல் நடப்பதாக அறிவிக்கப்பட்டதையொட்டி ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்பட அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்