கொடைரோடு அருகே, கிணற்றில் கல்லூரி மாணவி பிணம்

கொடைரோடு அருகே கிணற்றில் கல்லூரி மாணவி பிணமாக மிதந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-07 22:30 GMT
கொடைரோடு, 

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சி காமலாபுரம் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் ஜோசப் (வயது 50). அவருடைய மனைவி ஜெயமணி (45). இவர்களுக்கு ஷெரின் வின்யா, வின்சியா (வயது 20) ஆகிய 2 மகள்களும், மெர்வின் என்ற மகனும் இருந்தனர். இதில் வின்சியா திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று மதியம் வின்சியா தோட்டத்துக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து வின்சியாவை தேடி தாய் ஜெயமணி, தம்பி மெர்வின் ஆகியோர் சென்றனர். அப்போது தோட்டத்தில் உள்ள கிணற்றில் வின்சியா பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசாரும், நிலக்கோட்டை தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி வின்சியாவின் உடலை மீட்டனர். இதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுமார் 50 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 அடி வரை தண்ணீர் உள்ளது. கிணற்றில் தடுப்பு சுவர் இல்லை. எனவே கிணற்றில் வின்சியா தவறி விழுந்து இறந்தாரா? அல்லது கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்