கரூர் பகுதியில் பரவலாக மழை: சின்னஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பியது விவசாய பணிகள் தீவிரம்

கரூர் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் சின்னஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி யது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடக்கிறது.

Update: 2019-12-08 23:00 GMT
கரூர்,

கரூரில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் ஆங்காங்கே உள்ள மண் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளித்தன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டமானது நேற்று காலை 8 மணி நிலவரப்படி 73.33 அடியாக உள்ளது. அணைக்கு 588 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து கரூர் அமராவதி ஆற்றுக்கு நீர் திறப்பு இல்லை. எனினும் கரூர் அமராவதி ஆற்றில் ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீருடன், மழைநீர் வழிந்தோடி வந்து கலப்பதால் செட்டிப்பாளையம் அணையானது முழுக்கொள்ளளவை எட்டி கடல்போல் காட்சியளிக்கிறது. இதேபோல் சின்னஆண்டாங்கோவில் தடுப்பணையும் நிரம்பியுள்ளது. அதிலிருந்து தண்ணீர், கரூர் நகர் அமராவதி ஆற்றில் வழிந்தோடி செல்கிறது.

விவசாய பணிகள் தீவிரம்

இதன் காரணமாக கரூர் லைட்அவுஸ் கார்னர், பசுபதிபாளையம், சணப்பிரட்டி, மேலப்பாளையம், கோயம்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் சிறிதளவு தண்ணீரில் மக்கள் துணி துவைப்பது, குளிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அமராவதி ஆற்றுநீரானது வாய்க்கால்கள் மூலம் பாசனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விவசாய பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனினும் லைட்அவுஸ் கார்னர் பாலம், பசுபதிபாளையம் உள்ளிட்ட இடங்களில் அமராவதி ஆற்றில் கழிவுநீர் ஆங்காங்கே கலக்கின்றன. இதனை திறந்து விடுவது யார்? என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த ஆண்டு செட்டிப் பாளையம் அணையில் சாயக்கழிவுநீர் கலந்த போது, அதனை அதிகாரிகள் தான் ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அப்போது நீர் மாசுபட்டதோடு, விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சாயக்கழிவுகள் எங்காவது திறந்து விடப்படுகின்றனவா? என்பதையும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்