உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் கலெக்டர் ஆய்வு

உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று ஆய்வு செய்தார்.

Update: 2019-12-09 22:30 GMT
தென்திருப்பேரை,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடுகிறவர்களுக்கு அந்தந்த யூனியன் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகிறவர்களுக்கு அந்தந்த பஞ்சாயத்து அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் நாளான நேற்று அனைத்து யூனியன் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து அலுவலகங்களிலும் ஏராளமானவர்கள் வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வேட்புமனுக்களை பூர்த்தி செய்த பின்னர் அவற்றை அந்தந்த யூனியன் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து அலுவலகங்களிலும் தாக்கல் செய்வார்கள்.

தென்திருப்பேரையில் உள்ள ஆழ்வார்திருநகரி யூனியன் அலுவலகத்தில், உள்ளாட்சி அமைப்பில் ஒவ்வொரு பதவிக்கும் போட்டியிடுகிறவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்குவதற்காக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் ஏராளமானவர்கள் வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், வேட்புமனு தாக்கல் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இதேபோன்று கோவில்பட்டி, விளாத்திகுளம், கயத்தாறு, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம் உள்ளிட்ட யூனியன் அலுவலகங்களிலும், பஞ்சாயத்து அலுவலங்களிலும் ஏராளமானவர்கள் வேட்புமனுக்களை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மேலும் செய்திகள்