இடைத்தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு மந்திரி பதவி - எடியூரப்பா அறிவிப்பு

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவி வழங்கப்படும் என்று எடியூரப்பா கூறினார்.

Update: 2019-12-09 22:30 GMT
பெங்களூரு,

இடைத்தேர்தல் முடிவு குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:

15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். நிலையான ஆட்சியை விரும்பி மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர். அதனால் எங்கள் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் எங்களுக்கு பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.

இனி நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியில் முழு கவனம் செலுத்துவோம். மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் மீதமுள்ள 3½ ஆண்டில் சிறப்பான ஆட்சி நிர்வாகத்தை வழங்குவேன். ஆட்சி நிர்வாகத்தை நல்ல முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் குழப்பம் ஏற்படுத்துவதை விட்டுவிட்டு, இப்போதாவது எனக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து விலகி எங்கள் கட்சியில் சேர்ந்து வெற்றி பெற்ற அனைவருக்கும் மந்திரி பதவியை வழங்குவோம் என்று உறுதியளித்து உள்ளோம். நாங்கள் அளித்த இந்த உறுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. அவர்களுக்கு மந்திரி பதவி வழங்கி, அவர்களின் பகுதிகளில் எங்கள் கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

மேலும் செய்திகள்