இருசக்கரவாகனத்தில் வந்த, அரசு பெண் டாக்டரிடம் நகை பறித்தவருக்கு 4 ஆண்டு ஜெயில் - ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு தீர்ப்பு

அரசு பெண் டாக்டரிடம் நகையை பறித்தவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்துள்ளது.

Update: 2019-12-09 22:00 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 

ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிபவர் மேகலா. இவர் கடந்த 19.11.2011 அன்று தனது இரு சக்கர வாகனத்தில் முகவூரில் இருந்து ராஜபாளையத்துக்கு வந்து கொண்டிருந்தார்.

முகவூர் விலக்கு அருகே வரும் போது அவரது வாகனத்தில் கட்டையை கொடுத்து நிலை தடுமாறச் செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 20 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றுவிட்டனர்.

இது தொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேத்தூர் பகுதியை சேர்ந்த கணேசன், பிரசாந்த் உள்பட 5 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட விரைவு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

நீதிபதி பரிமளா இந்த வழக்கை விசாரித்து கணேசனுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி உத்தரவிட்டார் மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிரசாந்த் இறந்து விட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் சிறுவர்களாக இருப்பதால் அவர்கள் மீதான வழக்கு விருதுநகரில் உள்ள சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்