திருவள்ளூர் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் சாவு: நடவடிக்கை எடுக்கக்கோரி - போலீஸ் நிலையம் முற்றுகை

திருவள்ளூர் அருகே வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பரிதாபமாக இறந்தான். நடவடிக்கை எடுக்கக்கோரி மப்பேடு போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2019-12-10 23:00 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த மப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் துக்காராம் (வயது 33). இவர் மப்பேடு பகுதியில் துணிக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குட்டிதேவி (30) என்ற மனைவியும், பரத்(4) என்ற மகனும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் துக்காராம் வேலையின் காரணமாக தனது மனைவி மற்றும் மகனுடன் மோட்டார் சைக்கிளில் வளர்புரத்திற்கு சென்றார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடைய வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த காந்தி பேட்டை தேவாலயம் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி துக்காராம், குட்டிதேவி, பரத் ஆகியோர் கீழே விழுந்தனர். வேனின் சக்கரத்தில் சிக்கி பரத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். இது குறித்து துக்காராம் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் வேன் டிரைவரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மப்பேடு மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மப்பேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு 4 வயது சிறுவன் இறப்புக்கு காரணமான வேன்டிரைவரை கைது செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இறந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மப்பேடு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் மப்பேடு இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுதொடர்பாக போலீசார் வேன் டிரைவரான திருவள்ளூரை அடுத்த பெரியகளக்காட்டூரை சேர்ந்த யுவராஜ் (23) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்