புதுச்சேரி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கவேண்டும் பாரதீய ஜனதா கோரிக்கை

புதுச்சேரி மக்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கவேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2019-12-10 22:30 GMT
புதுச்சேரி,

புதுவை மாநிலத்தில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் 1000-க்கும் மேற்பட்ட அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என உறுதியளித்தார். இதுவரை இதுசம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற துறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் முடங்கி உள்ளது.

புதுச்சேரி இந்திராகாந்தி மற்றும் பொது மருத்துவமனைகளில் செவிலியர்கள், சிறப்பு மருத்துவர்கள் பற்றாக்குறையினால் பல கோடி ரூபாய் முதலீட்டில் சி.டி. ஸ்கேன் அமைக்கப்பட்டும், அதை மக்கள் பயன்படுத்த முடியாமல் வெளியிடங்களில் சென்று ஸ்கேன் செய்யும் நிலை நிலவி வருகிறது.

நிரந்தர தீர்வு இல்லை

இதைப்போல் கல்விதுறையில், அரசுப்பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் பணியமர்த்தப்படாததால் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. வருடந்தோறும் மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறைந்து வருவதற்கு காரணம் பெற்றோர்களோ, மாணவர்களோ காரணமில்லை. இதற்கு அரசே காரணம். உடனடியாக அரசுப்பள்ளிகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

ஊதிய பிரச்சினை காரணமாக கடந்த 2 மாதங்களாக அரசு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் காங்கிரஸ் அரசு 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு சம்பளம் போடாததால் அவர்கள் அனைவரது குடும்பமும் வறுமையால் வாடுகிறது. இதற்காக அரசு எந்தவிதமான நிரந்தர தீர்வையும் எட்டவில்லை.

பொங்கல் பரிசு

இந்த பிரச்சினைக்கு பொங்கலுக்கு முன்னதாக தீர்வு காணவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் பாரதீய ஜனதா கட்சியும் அரசு ஊழியர்களும் இணைந்து நடத்துவோம். தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.1000 மற்றும் பச்சரிசி, முந்திரி, திராட்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே புதுச்சேரியிலும் உடனடியாக அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் திட்டமிட்டபடி பொங்கல் பரிசு உடனடியாக வழங்கவேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாமிநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்