விழுப்புரத்தில் பரபரப்பு, கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-12-11 22:30 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் கே.கே.சாலை அரச மரத்தடியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் மாலை கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு இரவில் கோவிலை அதன் நிர்வாகி ராஜ்கண்ணு பூட்டிவிட்டு சென்றுள்ளார். நேற்று காலை கோவில் வளாகத்தை சுத்தம் செய்து கோலம் போடுவதற்காக அதே பகுதியை சேர்ந்த வளர்மதி என்பவர் வந்தார். அவர் கோவில் கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே இதுபற்றி அவர் கோவில் நிர்வாகி ராஜ்கண்ணுவிற்கு தகவல் தெரிவித்தார். அவர், கோவிலுக்கு விரைந்து வந்து பார்த்தார். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார், அந்த கோவிலுக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், கோவிலின் பின்பக்க சுவர் வழியாக ஏறி உள்ளே குதித்து உண்டியலை உடைத்து அதிலிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது.

கடந்த ஓராண்டுக்கு முன்பு இக்கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன் பிறகு இதுவரை உண்டியல் திறந்து எண்ணப்படாததால் உண்டியலில் காணிக்கை பணம் 30 ஆயிரம் ரூபாய் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்