மூங்கில்துறைப்பட்டு அருகே, கால்நடை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்தது; 2 குழந்தைகள் காயம்

மூங்கில்துறைப்பட்டு அருகே கால்நடை தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததில் 2 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-11 22:15 GMT
மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அருகே அரும்பராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருக்கு ரித்திகா (வயது 5) கவியரசு (4) என்ற 2 மகள் கள் உள்ளனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் முன்பருவ கல்வி பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்தின் முன்பு தமிழக அரசின் சார்பில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.20 ஆயிரம் செலவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கால்நடைகளுக்கான தண்ணீர் தொட்டி கட்டப்பட்டது.

மேலும் அந்த தொட்டியில் சிமெண்டு கலவையால் செய்யப்பட்ட பெயர் பலகையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் அங்கன்வாடி மையத்துக்கு வழக்கம்போல் நேற்று ரித்திகா, கவியரசு ஆகியோர் சென்றனர். பின்னர் அவர்கள் அங்கன்வாடி மையத்தின் முன்பு உள்ள கால்நடை தொட்டி அருகே விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென தொட்டியின் ஒரு பகுதியும் மற்றும் அங்கு அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையும் இடிந்து அங்கு விளையாடி கொண்டிருந்த குழந்தைகளான ரித்திகா, கவியரசு ஆகியோர் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மூங்கில்துறைப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த தகவலின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூங்கில்துறைப்பட்டு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்