நாகை மாவட்டத்தில் கூடுதலாக 50 ரோந்து வாகனங்கள் விரைவில் இயக்கப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்

நாகை மாவட்டத்தில் கூடுதலாக 50 ரோந்து வாகனங்கள் விரைவில் இயக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தெரிவித்தார்.

Update: 2019-12-11 22:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே பாப்பாக்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாவட்ட போலீஸ் துறை சார்பில் காவலன் செயலி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமை தாங்கினார். ஊர் காவல்படை மண்டல தளபதி ஆனந்த், இன்ஸ்பெக்டர் வெர்ஜீனியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் காவலன் செயலியை போலீஸ் சூப்பிரண்டு அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இன்றைய நவீன அறிவியல் உலகத்தில் ஸ்மார்ட் செல்போன் முக்கிய அங்கம் வகிக்கின்றது. எனவே எல்லா மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவீர்கள். நமது நாட்டில் 60 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது. இதில் தமிழகத்தில் 5 கோடி ஸ்மார்ட் போன் பயன்படுத்தப்படுகிறது.

பதிவிறக்கம்

இதை தவிர சாதாரண போன்களும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் பெண்களை பாதுகாக்க போலீஸ் துறை சார்பில் காவலன் செயலி என்ற புதிய ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் பெண்கள் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றை எடுத்து விட்டு முதலில் இந்த காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும். இந்த செயலியின் மூலம் பெண்கள் தனியாக செல்லும் போது தங்களுக்கு ஆபத்து ஏற்பட போவதாக உணர்ந்தால் உடனே தகவல் தெரிவிக்கலாம்.

கூடுதலாக 50 ரோந்து வாகனங்கள்

நீங்கள் தெரிவிக்கும் இந்த தகவல் சென்னை அலுவலகம் சென்று அங்கிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படும். அங்கிருந்து தகவல் தெரிவித்த இடத்திற்கு அருகில் இருக்கும் ரோந்து போலீசாருக்கு தகவல் அனுப்பி பாதுகாக்கப்படுவீர்கள். இந்த செயல்கள் அனைத்தும் 10 நிமிடங்களில் முடியும். காவலன் செயலி மூலம் தகவல் அனுப்பியவுடன் நீங்கள் எந்த இடத்தில் இருந்து தகவல் அனுப்பினீர்கள் என்பது உள்பட அனைத்தும் சேகரிக்கப்படும். அந்த அளவிற்கு இந்த காவலன் செயலி நவீனமயமாக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கூடுதலாக 50 ரோந்து வாகனங்கள் விரைவில் இயக்கப்படும். இதனால் காவலன் செயலியில் இருந்து தகவல் வந்தவுடன் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்