திருவண்ணாமலையில் தீபமலை உச்சியில் இருந்து 25 அடி பள்ளத்தில் தவறி விழுந்த சிறுவன் - தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்

தீபத்திருவிழாவின்போது மலை உச்சியில் தீபத்தை பார்க்க சென்ற சிறுவன் 25 அடி பள்ளத்தில் விழுந்தான். அவனை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Update: 2019-12-11 22:15 GMT
திருவண்ணாமலை,


திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 668 அடி உயர தீபமலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை காண்பதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதியின்பேரில் 2 ஆயிரத்து 500 பக்தர்கள் காலை முதலே மலைக்கு ஏறிச்சென்று தீபத்தை காண ஆர்வமுடன் இருந்தனர். திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் வினோத் (வயது 14) என்ற சிறுவனும் ஆர்வத்துடன் மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.

மலைஉச்சியை நெருங்கிய வினோத் திடீரென அருகில் இருந்த சுமார் 25 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தான். இதனால் மலையேறிய பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் அவனை மீட்டனர். இந்த சம்பவத்தில் வினோத்துக்கு கை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் ஸ்டிரெச்சரில் தூக்கிக்கொண்டு அடிவாரத்துக்கு வந்தனர். அதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து வினோத்தை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மகாதீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமல்லாமல் வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் கோவில், கிரிவலப்பாதை மட்டுமல்லாமல் நகர் முழுவதும், நகரின் எல்லைப்பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தேனி மாவட்டம் ஓடைப்பட்டி போலீஸ் நிலைய ஏட்டு ஜோதிமணி (58), இனாம்காரியந்தல் கூட்ரோடு பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பஸ் அவர் மீது மோதியது. இதனால் அவர் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஜோதிமணி ஒரு மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்