வெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி போலீஸ் விசாரணை

வெளிநாட்டில் இருந்து ‘வாட்ஸ்-அப்’பில் பேசி ரூ.15¾ லட்சம் மோசடி செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-12-11 22:15 GMT
நாகர்கோவில்,

களியக்காவிளை தையாலுமூடு விராலிவிளைவீடு பகுதியை சேர்ந்தவர் ஆல்பர்ட்சிசில், எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜெகாஜினி (வயது 47). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் ஊரை சேர்ந்த ஸ்டீபா என்பவரின் செல்போன் நம்பருக்கு வெளிநாட்டில் இருந்து பிராங்க் ஜாண் என்பவர் பேசினார். ஸ்டீபாவுக்கு ஆங்கிலம் தெரியாததால் என் கணவரிடம் பேசும்படி கொடுத்தார். அவர் லண்டனில் இருந்து பேசுவதாக கூறினார். அவ்வாறு என் கணவர் பேசியபோது பிராங்க் ஜாண் தனக்கு வேலைக்காக விசா ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். என் கணவர் நன்றாக ஆங்கிலம் பேசியதால் விசா ஏற்பாடு செய்ய கேட்டுக்கொண்டார். ஆனால் என் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மறுத்துவிட்டார்.

வழக்குபதிவு

அதன்பிறகு என் கணவருடன் பிராங்க் ஜாண் ‘வாட்ஸ்-அப்’ மூலம் பேசினார். அப்போது என் கணவருக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை கொரியர் மூலமாக வெளிநாட்டில் இருந்து பிராங்க் ஜாண் அனுப்பினார். ஆனால் அந்த பரிசு பொருளை டெல்லி ஏர்போட்டில் அதிகாரிகள் கைப்பற்றினர். உரிய வரி செலுத்தினால் மட்டுமே கொரியரை எடுக்க முடியும் என்று கூறினர். இதை நம்பி பரிசு பொருளை வாங்க முதலில் ரூ.30 ஆயிரத்தை பிராங்க் ஜாண் வங்கி கணக்குக்கு என் கணவர் அனுப்பினார். இவ்வாறு பல தவணைகளாக ரூ.15 லட்சத்து 85 ஆயிரம் அனுப்பி வைத்தார். ஆனால் அந்த பணத்தை அவர் திரும்பி கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதனால் மனமுடைந்து என் கணவர் இறந்துவிட்டார். எனவே பிராங்க் ஜாண் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் பிராங்க் ஜாண் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்