தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க இலக்கு - சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்

தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்குள் காசநோய் இல்லாத நிலையை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நெல்லை சுகாதாரத்துறை துணை இயக்குனர் (காசநோய் தடுப்பு) வெள்ளைச்சாமி தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

Update: 2019-12-12 22:45 GMT
நெல்லை, 

வருகிற 2025-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் காசநோய் இல்லாத நிலையை உருவாக்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தீவிர காசநோய் கண்டறிவதற்கான சிறப்பு முகாம் கடந்த 2-ந்தேதி தொடங்கி, வருகிற 21-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக சென்னையில் இருந்து நவீன ‘எக்ஸ்ரே’ எடுக்கும் வசதி கொண்ட வாகனம் நாளை (சனிக்கிழமை) வருகிறது. இந்த வாகனம் 18-ந்தேதி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் சுற்றி வருகிறது. முக்கிய இடங்களில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு எக்ஸ்ரே எடுத்து, அவர்களது சளி மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு காசநோய் இருக்கிறதா? என்று கண்டறியப்படும்.

குறிப்பாக பீடி சுற்றும் தொழிலாளர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள், கல் உடைக்கும் தொழிலாளர்கள், செங்கல் சூளை பணியாளர்கள், மலைவாழ் மக்கள், ஆஸ்பத்திரிக்கு வரமுடியாத நோயாளிகளை தேடிச்சென்று பரிசோதனை செய்யப்படும்.

காசநோய் கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுவார்கள். தனியார் ஆய்வகத்தில் இந்த பரிசோதனை செய்தால் ரூ.4 ஆயிரம் வரை செலவு ஆகும். காசநோய் என்பது இருமல், தும்மலின் போது காற்றின் மூலம் மற்றவர்களுக்கும் பரவக்கூடியது ஆகும். காசநோய் ஏற்பட்டவர்கள் 6 மாதங்கள் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்களை முற்றிலும் குணப்படுத்த அரசு விலை உயர்ந்த மாத்திரைகளை இலவசமாக வழங்குகிறது. மேலும் மாதம் ரூ.500 ஊட்டச்சத்து உணவு சாப்பிடவும் வழங்குகிறது.

எனவே பொதுமக்கள் தங்களுக்கு காசநோய் இருக்கிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டால் இந்த பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று நல்ல நிலைக்கு வருவதுடன், காசநோயை தங்களது குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரவாமல் தடுக்கலாம். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் காசநோய் காணப்பட்டால், அவர்கள் குறித்த விவரத்தை மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் உள்ள அரசு நெஞ்சக நோய் பிரிவு ஆஸ்பத்திரி வளாகத்தில் துணை இயக்குனர் வெள்ளைச்சாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி நெஞ்சக பிரிவு துணை பேராசிரியர் ரகுமான் சாகுல் அமீது, துறைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணை பேராசாரியர் முத்துக்குமார், பேராசிரியர் மதன், மருத்துவ அலுவலர் நடராஜன், டாக்டர் ஜெயந்தசீலி, முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்கள் முத்துராஜா, முருகன் மற்றும் டாக்டர்கள், செவிலியர்கள், களப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்