விபத்தை ஏற்படுத்தி கல்லூரி மாணவர் சாவுக்கு காரணமான டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

விபத்தை ஏற்படுத்தி கல்லூரி மாணவர் சாவுக்கு காரணமான டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி 2-வது கூடுதல் சப்-கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2019-12-12 22:15 GMT
திருச்சி,

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மலையடிப்பட்டி அருகில் உள்ள வடதோட்டத்தை சேர்ந்த லூர்துசாமி மகன் எபிநேசர் (வயது18). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 20-2-2017 அன்று காலை கல்லூரிக்கு செல்வதற்காக எபிநேசர் தனது பொபட்டில் வந்து கொண்டிருந்தார்.

திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தொம்பச்சி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ஒரு மினி வேன் அவர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த எபிநேசர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

6 ஆண்டு சிறை தண்டனை

இதையொட்டி மணப்பாறை போலீசார், மினி வேன் டிரைவர் மாராட்சிரெட்டியார் பட்டியை சேர்ந்த ராம்குமார் (39) என்பவரை கைது செய்து திருச்சி 2-வது கூடுதல் சப் -கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர் மீது கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வாகனம் ஓட்டியது, கொலை குற்றம் ஆகாத மரணத்தை ஏற்படுத்தியது ஆகிய சட்டப்பிரிவு களின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ராம்குமாருக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறைதண்டனை, ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி கோகுல்முருகன் தீர்ப்பு கூறினார். போலீசார் தரப்பில் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ஜெயராமன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்