சின்னசேலம் அருகே, மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சம் - சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சின்னசேலம் அருகே மர்ம காய்ச்சல் பரவுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மர்ம காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2019-12-12 22:15 GMT
சின்னசேலம்,

சின்னசேலம் அருகே உள்ள ராயப்பனூர் ஊராட்சிக்கு உட்பட்டது செல்லியம்பாளையம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அருகில் உள்ள மேல்நாரியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.

இதுதவிர சேலம், தலை வாசல், ஆத்தூர் போன்ற இடங்களில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும் சிலருக்கு 3 வாரங்களாகியும் காய்ச்சல் குணமாகாமல் விட்டு விட்டு வருகிறதாம். இவர்களுக்கு காய்ச்சலுடன், உடல் வலியும், கை, கால் வலியும் இருப்பதாக கூறுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வந்த செல்லியம்பாளையம் வெங்கடாசலம் என்பவரது மகள் ஜெயஸ்ரீ(வயது 5) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். மேலும் இதே ஊரைச்சேர்ந்த பூமாலை மகன் அழகுதாசன்(15), தமிழரசன் மகன் ஹரி(9), தம்பிதுரை மகன் பிரகா‌‌ஷ்(7) உள்பட சிலர் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே செல்லியம்பாளையத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மேலும் செய்திகள்