உள்ளாட்சி தேர்தல்: கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் - ஜான்பாண்டியன் வற்புறுத்தல்

உள்ளாட்சி தேர்தலுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.

Update: 2019-12-12 22:30 GMT
மதுரை, 

தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான்பாண்டியன் நேற்று மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு கமிஷனர் டேவிட்சன்தேவாசீர்வாதத்தை சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது மற்றும் எங்களுக்குரிய இட ஒதுக்கீடு குறித்து கூட்டணி கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இடம்பெற்று உள்ளோம். எனவே அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உள்ளாட்சி தேர்தலை நிறுத்த முயற்சி செய்கிறார்கள் என்று அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் மக்கள் விழிப்புடன் உள்ளனர். உள்ளாட்சி தேர்தல் என்றால் பிரச்சினை வரத்தான்செய்யும். எனவே சட்டம்- ஒழுங்கை கண்காணித்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் ஆணவ கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தடுக்க புதிய சட்டம் நிறைவேற்ற வேண்டும். நமக்கான உரிமையை மீட்கும் குடியுரிமை மசோதாவிற்கு அ.தி.மு.க. ஆதரவளித்தது வரவேற்கத்தக்கது.

அ.தி.மு.க. போல தி.மு.க.வும் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்திருந்தால் அந்த மசோதாவை ஆதரித்திருப்பார்கள். இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்காததால் அதனை எதிர்க்கிறோம் என்று கூறுவது தவறு. தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர் ஆதரவாளர்கள் மற்றும் தலைவர்களால் தான் ஈழத் தமிழர்கள் அங்கே அழிந்தார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்