ஆறுமுகநேரியில் துணிகரம்: கேபிள் டி.வி. ஊழியர் வீட்டில் 9¾ பவுன் நகை திருட்டு

ஆறுமுகநேரியில் தனியார் கேபிள் டி.வி. ஊழியர் வீட்டில் 9¾ பவுன் நகைகளை மர்மநபர் திருடிச் சென்றார். மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

Update: 2019-12-13 22:30 GMT
ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பெருமாள் (வயது 70). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அன்னக்கிளி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. 3 மகன்களும் மும்பையில் தொழில் செய்து வருகின்றனர். ஒரு மகள் சென்னையிலும், மற்றொரு மகள் ஆறுமுகநேரியிலும் வசித்து வருகின்றனர்.

இதனால் பெருமாள், அன்னக்கிளி ஆகியோருக்கு உதவியாக, அவர்களுடன் ஆறுமுகநேரியை சேர்ந்த பேத்தியும் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்னக்கிளி சென்னையில் உள்ள தன்னுடைய மகளை பார்ப்பதற்காக சென்றார். இதனால் பெருமாளும், அவருடைய பேத்தியும் வீட்டில் இருந்தனர்.

நேற்று அதிகாலை 5 மணி அளவில் பெருமாள் டீ குடிப்பதற்காக அப்பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது வீட்டில் பேத்தி தூங்கி கொண்டிருந்ததால், கதவை சாத்தி வைத்து விட்டு சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக பெருமாளின் வீட்டுக்குள் புகுந்து, மாடியில் உள்ள அறைக்கு சென்றார். அங்கு அலமாரியில் இருந்த சாவியை எடுத்து அங்கிருந்த பீரோவை திறந்து, அதில் இருந்த 9¾ பவுன் நகைகளை திருடிச் சென்றார்.

பின்னர் காலையில் வீட்டுக்கு திரும்பி வந்த பெருமாள் தனது வீட்டின் மாடியில் உள்ள அறையில் பீரோவின் கதவு திறந்து கிடந்ததையும், அதில் இருந்த நகைகள் திருடு போனதையும் அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதற்கிடையே பெருமாளின் பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலி தொழிலாளி மூக்காண்டி நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டில் ஜன்னலின் அருகில் தனது செல்போனை சார்ஜருடன் இணைத்து வைத்து இருந்தார். மேலும் ஜன்னலையும் திறந்து வைத்து தூங்கினார். நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர், மூக்காண்டி வீட்டின் காம்பவுண்டு சுவரை தாண்டி குதித்து நுழைந்து, ஜன்னலின் அருகில் இருந்த செல்போனை திருடிச் சென்றார்.

பின்னர் அந்த மர்மநபர், ஆறுமுகநேரி போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள கீழ வீடு தெருவில் உள்ள ஒரு வீட்டில் திருடுவதற்காக, அந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது சத்தம் கேட்டதும், அந்த வீட்டில் இருந்தவர்கள் கண்விழித்து எழுந்து, மின்விளக்குகளை எரியச் செய்தனர். இதையடுத்து மர்மநபர் தப்பி ஓடி விட்டார். அப்போது அவரது பையில் இருந்த மூக்காண்டியின் செல்போன் தவறி கீழே விழுந்தது. இதனை அறியாமல் மர்மநபர் தப்பி ஓடி விட்டார். அந்த செல்போனை எடுத்த அந்த வீட்டினர், அதனை ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, சம்பவ இடங்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். திருட்டு நடந்த வீடுகளில் பதிவான தடயங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஒரே நாள் இரவில் அடுத்தடுத்த வீடுகளில் மர்மநபர் புகுந்து நகைகள், செல்போனை திருடியதுடன், மற்றொரு வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்