முதியோர் ஓய்வூதியம் பெற போலி கையெழுத்து - பெண்ணிடம், போலீஸ் விசாரணை

வேலூரில் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கு போலியாக கையெழுத்திட்டு, போலி முத்திரையிட்ட பெண் சிக்கினார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-12-13 22:15 GMT
வேலூர், 

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நேற்று வேலூர் தாலுகா அலுவலகத்துக்கு சென்றார். அங்கு பணியில் இருந்த சமூகபாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெகதீஸ்வரனிடம், எனக்கு வேண்டப்பட்ட பெண்கள் இருவருக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறி அதற்கான 2 மனுக்களையும் கொடுத்தார்.

அதில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் கையெழுத்திடப் பட்டிருந்தது. மேலும் அரசு முத்திரையிடப்பட்டிருந்தது. இதனை தாசில்தார் ஜெகதீஸ்வரன் ஆய்வு செய்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் கையெழுத்தில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அரசு முத்திரையிலும் வித்தியாசம் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த அவர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து விசாரித்தார். அதற்கு அவர்கள் மனுவில் உள்ள கையெழுத்து தங்களுடையது அல்ல என்று கூறினர். அந்த பெண், அரசு அலுவலர்களின் கையெழுத்தை போலியாக போட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ்நிலையத்தில், வருவாய் ஆய்வாளர் சவுந்தர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்