நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாட புதுக்கோட்டை மாணவி தேர்வு - சென்றுவர பணம் இன்றி தவிப்பு

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாட புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் அங்கு சென்றுவர பணம் இல்லாமல் தவித்து வருகிறார்.

Update: 2019-12-13 22:45 GMT
புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் கருப்பையா. கூலி தொழிலாளியான இவரது மனைவி அழகுவள்ளி. இவர்களது மகள் ஜெயலட்சுமி (வயது 16). இவர் புதுக்கோட்டையில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 (உயிர் கணிதவியல்) படித்து வருகிறார்.

கல்வியில் சிறந்த மாணவியாக திகழும் ஜெயலட்சுமி கேரம், வினாடி-வினா, கபடி, கட்டுரை போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் மாவட்ட, மண்டல அளவில் சிறப்பிடம் பிடித்து உள்ளார். மேலும் திறனாய்வு தேர்வுகளிலும் வெற்றி பெற்று அரசிடம் இருந்து சிறு உதவித்தொகையையும் பெற்று வருகிறார்.

மாணவி ஜெயலட்சுமியின் செயலை பாராட்டி கலை பண்பாட்டுத்துறை சார்பில் 'இளந்திரு விருது' எனும் விருது வழங்கப்பட்டு உள்ளது. சாதிக்க வேண்டும் என்ற வேட்கையோடு கனவு காணும் ஜெயலட்சுமிக்கு தினமும் பாடப்புத்தகங்களை கடந்து மற்ற புத்தகங்கள், நாளிதழ்களை வாசிக்கும் பழக்கமும் உண்டு. அந்த வகையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் நடத்தும் அறிவியல் கட்டுரை போட்டிக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்து இருந்தார். இதில் முதல்கட்டமாக நடத்தப்பட்ட தகுதித்தேர்வில் ஜெயலட்சுமி வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டு மே மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள இறுதித்தேர்வில் கலந்து கொள்ளவும், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை பார்வையிடவும், அங்கு உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்களோடு கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் மாணவி ஜெயலட்சுமி தேர்வாகி உள்ளார். அமெரிக்காவில் நடக்கும் இறுதிபோட்டியில் வெற்றி பெற்றால், அவருக்கு 10 ஆயிரம் டாலர் பரிசு தொகை வழங்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் அங்கு சென்று திரும்புவதற்கு ஆகும் செலவு ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்தை மாணவியே ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அந்நிறுவனம் அறிவித்து உள்ளது. இதனால் மாணவி ஜெயலட்சுமி அதிர்ச்சி அடைந்து உள்ளார். மேலும் அமெரிக்கா சென்றுவர பணம் இல்லாமல் மாணவி ஜெயலட்சுமி தவித்து வருகிறார்.

இது குறித்து மாணவி ஜெயலட்சுமி கூறியதாவது:-

எனது குடும்பத்துக்கு அப்பாவிடம் இருந்து எந்த ஆதரவும் கிடையாது. நானும் எனது அம்மா மற்றும் தம்பி கோவிந்தராஜ் ஆகியோர் எனது சித்தப்பாவின் வீட்டில் வசித்து வருகிறோம். அம்மா மனநோயாளியாக உள்ளார். இருந்த ஓட்டு வீடும் கஜா புயலுக்கு தரைமட்டமாகிவிட்டது. சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு ஒவ்வொரு நொடியையும் கடந்து கொண்டு இருக்கிறேன்.

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற உள்ள தேர்வில் பங்கேற்று முதல் பரிசை பெற வேண்டும் என்பது எனது ஆசை. அதற்கான தகுதியும், ஆர்வமும் என்னிடம் இருக்கிறது. ஆனால் அங்கு சென்று வருவதற்கு தேவையான பணம் இல்லை. நல்ல உள்ளங்கள் உதவி செய்தால் நான் அமெரிக்காவிற்கு சென்று, அங்கு நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்