கோபியில் பயங்கரம்: நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூர கொலை

கோபியில் நிதிநிறுவன அதிகாரி ஓட ஓட அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2019-12-13 23:15 GMT
கடத்தூர்,

சேலம் மாவட்டம் கிச்சிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 30). திருமணம் ஆகாதவர். இவர் ஈரோடு மாவட்டம் கோபி நாய்க்கான்காட்டில் செயல்படும் சாவேரி என்ற நிதி நிறுவனத்தில் கள அதிகாரியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு சண்முகம் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்து வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். அருகே மேலும் 3 பேர் வேலை பார்த்துக்கொண்டு இருந்ததாக தெரிகிறது. நிதி நிறுவன அலுவலகம் அடுக்குமாடி கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ளது.

இந்தநிலையில் இரவு 7.30 மணி அளவில் கையில் அரிவாளுடன் 4 பேர் நிதிநிறுவனத்துக்குள் திடீரென நுழைந்தார்கள். பின்னர் கையில் வைத்திருந்த அரிவாளால் 4 பேரும் சண்முகத்தை வெட்ட தொடங்கினார்கள். அவர், அய்யோ அம்மா என்று அலறியபடியே அலுவலகத்தை விட்டு வெளியே தப்பி ஓடினார். ஆனாலும் அவரை விடாமல் 4 பேரும் துரத்தினார்கள்.

அப்போது மாடியின் படிக்கட்டில் சண்முகத்தை 4 பேரும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினார்கள். இதில் உடலில் பல இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டு அந்த இடத்திலேயே அலறியபடி சண்முகம் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

சண்முகத்தை அலுவலகத்தில் புகுந்து மர்ம நபர்கள் வெட்டும்போது, அருகே வேலை பார்த்துக்கொண்டு இருந்த பணியாளர்கள் பயந்து ஓடிவிட்டார்கள். இதேபோல் கொலை நடந்ததும் அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளையும் அதன் உரிமையாளர்கள் அச்சத்தில் அடைத்துவிட்டார்கள்.

இந்தநிலையில் கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பரண்டு தங்கவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் சண்முகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

சம்பவம் நடந்த நிதிநிறுவனத்தின் அடுக்குமாடி கட்டிடம் கோபி-சத்தி மெயின் ரோட்டில் அமைந்துள்ளது. அதனால் அந்த இடத்தில் வேடிக்கை பார்க்க ஏராளமானோர் திரண்டு விட்டார்கள்.

முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சண்முகத்தை வெட்டி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள். மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருக்கும் மெயின் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில், மர்ம நபர்கள் புகுந்து ஒருவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது கோபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்