குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு: கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ராயப்பேட்டையில் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-13 22:00 GMT
சென்னை,

மத்திய பா.ஜ.க. அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கொண்டு வந்தது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அந்த மசோதா நிறைவேறியது. இதை எதிர்த்து பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புது கல்லூரியில் மாணவர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிரான பல்வேறு கருத்துகள் அடங்கிய பதாகைகளை கையில் வைத்து மாணவர்கள் கோஷமிட்டனர்.

போராட்டம் குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில், ‘நம்முடைய நாடு மதசார்பற்ற அரசியலமைப்பை கொண்டது. அப்படி இருக்கும் போது மதத்தை வரைமுறையாக வைத்து குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவரக்கூடாது. இதனை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. ஈழத்தமிழர்களை பற்றி இதில் எதுவும் குறிப்பிடவில்லை. அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அடிப்படை அரசியல் சாசன உரிமைகள் இந்த மசோதாவால் பாதிக்கப்படுகிறது. எனவே குடியுரிமை திருத்த மசோதாவில் ஈழத்தமிழர்களையும் இடம்பெற செய்ய வேண்டும். அதில் மதத்தை வரைமுறையாக பார்க்கக்கூடாது’ என்றனர்.

மேலும் செய்திகள்