பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் - தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-12-13 23:00 GMT
ஜோலார்பேட்டை,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார். மேலும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரை அருகே இருந்து கவனித்து கொள்ளவும், பேரறிவாளனின் சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து, அவர் கடந்த மாதம் 12-ந் தேதி ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து வேலூர் ஜெயிலுக்கு வந்த பேரறிவாளன் அங்கிருந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.

இந்தநிலையில், பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட ஒரு மாதம் பரோல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதையொட்டி, அவரை மீண்டும் ஜெயிலில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. ஆனால் குயில்தாசன் உடல்நிலையை காரணம் காட்டி பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசுக்கு அவரது தாய் அற்புதம்மாள் கோரிக்கை வைத்தார். அதனை ஏற்று பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்