9-ம் வகுப்பு பருவத்தேர்வு: தேர்வு வினாத்தாள் மாற்றி வழங்கியதால் - மாணவர்கள் குழப்பம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் 9-ம் வகுப்பு பருவத்தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கு பதில் அறிவியல் வினாத்தாள் வழங்கியதால் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.

Update: 2019-12-13 23:00 GMT
கல்பாக்கம்,

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று பிற்பகல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பருவத்தேர்வு நடந்தது. ஆசிரியர்கள் உரிய நேரத்தில் தேர்வுத்தாள்களை வழங்கினர். புதுப்பட்டினம், கூவத்தூர், வெங்கம்பாக்கம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட ஒரு சில அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களை வாங்கி பார்த்த மாணவர்கள் தமிழ் வினாத்தாளுக்கு பதிலாக அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் இருப்பதை கண்டு குழப்பம் அடைந்தனர்.

இது குறித்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் முறையிட்டனர். அவர்கள் உடனடியாக வினாதாள்களை திருப்பி வாங்கி கொண்டனர். பின்னர் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் தமிழ் பாடத்திற்கான கேள்விகளை கரும்பலகையில் எழுதி போட்டு மாணவர்களை தேர்வு எழுத வைத்தனர்.

இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் தேர்வை நல்லமுறையில் எழுத முடியாமல் கடும் அவதிக்குள்ளானார்கள்.

இது குறித்து ஒருங்கிணைந்த காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வினாத்தாள்களை பள்ளிகளில் வைத்து தான் பிரித்து பார்ப்போம். அதன் பிறகு அவை மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் வழங்கப்படும்.வினாத் தாள் மாறியிருப்பது குறித்து விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்