மந்திராலயாவில் பரபரப்பு: 6-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி

மந்திராலயாவில் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்புக்கு அமைக்கப்பட்டிருந்த வலையில் விழுந்ததால் உயிர்தப்பினார்.

Update: 2019-12-13 22:45 GMT
மும்பை,

மராட்டிய தலைமை செயலகம் அமைந்துள்ள மந்திராலயாவுக்கு நேற்று பெண் ஒருவர் வந்தார். அவர் 6-வது மாடியில் உள்ள முதல்-மந்திரி அலுவலகத்திற்கு சென்று அதிகாரியிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அந்த மனு மீது பரிசீலனை செய்ய கால அவகாசம் தேவை என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது.

இதனால் மனஉளைச்சல் அடைந்த அந்த பெண், திடீரென 6-வது மாடியில் இருந்து கீழே குதித்து உள்ளார். அப்போது முதல் மாடியில் விரிக்கப்பட்டு இருந்த வலையில் அவர் விழுந்ததால் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சத்தம் போட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்று வலையில் விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில், அவர் தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த பிரியங்கா குப்தா எனவும், முதல்-மந்திரியின் மருத்துவ திட்டத்தின் கீழ் நிதி உதவி கேட்டு வந்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை சிகிச்சைக்காக ஜி.டி. அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது பற்றி தகவல் அறிந்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மந்திராலயாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை சந்திக்க சென்றார். முழுமையான விசாரணைக்கு பிறகே இதற்கான காரணம் தெரியவரும் என அவர் தெரிவித்தார்.

சிவசேனா தலைமையில் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைத்த சில நாட்களே ஆன நிலையில், பெண் ஒருவர் மந்திராலயாவில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்