வேட்பாளருடன் அதிகமானவர்கள் சென்றதால் வாக்குவாதம் - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் அதிகமானவர்கள் சென்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-13 23:08 GMT
திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந் தேதி மற்றும் 30-ந் தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும், மற்ற பதவிகளுக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 9-ந் தேதி முதல் வேட்பாளர்கள் தாங்கள் விருப்பப்படும் பதவிகளுக்கு போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம், மங்கலம், இடுவாய், தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், பெருமாநல்லூர், பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளிபுரம் ஆகிய 13 பஞ்சாயத்து பதவிகளுக்கு அந்த பகுதிகளை சேர்ந்தவர்கள் திருப்பூர் கோர்ட்டு ரோட்டில் உள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் 9-ந் தேதி தொடங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து வந்தனர். இதற்கிடையே இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ஆகிய 2 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். மேலும், மனுதாக்கல் செய்ய வருகிறவர்களும் தங்களது ஆதரவாளர்களுடன் கூட்டம், கூட்டமாக ஊர்வலமாக வந்தனர். அவர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மற்றும் அந்த பகுதியில் நின்று கொண்டிருந்தனர்.

இதன் காரணமாக கோர்ட்டு வீதியில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. இந்த நிலையில் ஈட்டிவீரம்பாளையம் தலைவர் பதவிக்கு பெண் வேட்பாளர் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் விஜயகுமார் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வந்தனர். தொடர்ந்து வேட்பு மனு கொடுக்கும் இடத்தில் நிர்ணயிக்கப்பட்டவர்களை விட அதிகமானவர்கள் சென்று வேட்பு மனு பெறும் அதிகாரியிடம் வேட்புமனு கொடுத்ததாகவும், வேட்பு மனு தாக்கலுக்கு வருகிறவர்களை உள்ளே அனுமதிப்பதில் பாரபட்சம் காட்டுவதாகவும் கூறி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த அ.ம.மு.க. கட்சியினர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அவர்கள் சமாதானம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்