குடியுரிமை சட்டதிருத்த நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டம் - 150 பேர் கைது

மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்து தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2019-12-13 22:45 GMT
கோவை,

மத்திய பா.ஜனதா அரசு குடியுரிமை சட்ட திருத்த த்தை நிறைவேற்றி உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க. இளைஞர் அணி சார்பில் சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் நடத்தப்படும் என்று இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

அதன்படி கோவை டாடாபாத்தில் மாநகர் மாவட்ட தி.மு.க. இளைஞர் அணியினர் நேற்றுக்காலை 10 மணியளவில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாநகர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் தளபதி இளங்கோ, கோட்டை அப்பாஸ் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

அப்போது அவர்கள், குடியுரிமை சட்ட திருத்த நகலை கிழித்தெறிய முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுக்க முயன்றனர். இதனால் அவர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஆனாலும் குடியுரிமை சட்ட திருத்த நகல்களை தி.மு.க.வினர் கிழித்தெறிந்தனர். இதையடுத்து தி.மு.க.வினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்று ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நந்தகுமார், குப்புசாமி, உமா மகேஸ்வரி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்