ஆரணி அருகே, குடித்து விட்டு வந்ததை திட்டியதால் மாமனார் தற்கொலை - போலீசுக்கு பயந்து வி‌ஷம் குடித்த மருமகளும் இறந்த பரிதாபம்

தினமும் குடித்து விட்டு போதையில் வீட்டுக்கு வந்ததை மருமகள் கண்டித்ததால் மனமுடைந்த மாமனார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் போலீஸ் விசாரணைக்கு பயந்த மருமகளும் வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-14 22:45 GMT
ஆரணி, 

ஆரணியை அடுத்த அணியாலை கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு (வயது 65), விவசாயி வேலு (வயது 65) இவருக்கு குமார் (வயது 35) என்ற மகனும், சிவசங்கரி, மைதிலி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். வேலு தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டிற்கு வரும்போதே வேலு தள்ளாடியபடி வந்துள்ளார்.

அப்போது குமாரின் மனைவி கலைவாணி (வயது 30), ‘‘ஊருக்கு பெரிய மனிதனாக இருந்துவிட்டு காலையிலேயே குடித்துவிட்டு வருகிறாயே’’ என சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மாமனார் வேலு, விவசாய பயன்பாட்டிற்கு வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். அப்போது அங்கு வந்த மைதிலியின் கணவர் முனியன் உடனடியாக வேலுவை ஆரணி மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு வேலு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இதனிடையே மாமனார் இறந்த தகவல் அறிந்த மருமகள் கலைவாணி போலீசார் தன்னை அழைத்து விசாரிப்பார்கள் என பயந்துகொண்டு அவரும் வி‌ஷத்தை குடித்து விட்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலைவாணி இறந்து விட்டார். இதுகுறித்து வேலுவின் தம்பி ஏழுமலை, களம்பூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்