பண்ருட்டியில் விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய 4 பேர் கைது

பண்ருட்டியில் விவசாயியின் மோட்டார் சைக்கிளில் இருந்த பணத்தை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-14 22:30 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி அடுத்த தாழம்பட்டை சேர்ந்தவர் ஹரி ராமன்(வயது 45). விவசாயி. இவர் கடந்த மாதம் பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் உள்ள வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.77 ஆயிரத்தை எடுத்து, அதை மோட்டார் சைக்கிளில் உள்ள பெட்டியில் வைத்தார். பின்னர் பஸ் நிலையம் சென்ற அவர், மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிள் பெட்டி உடைக்கப்பட்டிருந்தது. அதில் வைத்திருந்த பணத்தை காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஹரி ராமன் இதுகுறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராசன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் திருச்சி அருகே மணப்பாறையில் போலீசாரின் வாகன சோதனையின்போது ஆந்திராவை சேர்ந்த 4 பேர், பண்ருட்டியை சேர்ந்த ஒருவரிடம் பணத்தை திருடி வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் மணப்பாறை பகுதியிலும் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதையடுத்து மணப்பாறை போலீசார் பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அவர்கள் 4 பேரையும் பண்ருட்டிக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் நகரி பகுதியை சேர்ந்த சரவணன், ரமணா, பாபு, மோகன் என்பதும், ஹரிராமனின் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து ரூ.77 ஆயிரத்தை திருடியவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சரவணன் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ.77 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்